பொலன்னறுவை இந்துக் கோயில்கள்
இலங்கையின் பண்டைய தலைநகரங்களில் ஒன்று பொலன்னறுவை. சோழர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகராக்கப்பட்ட இந்த நகரத்தில், அக்காலத்தில் சோழர்களின் படைவீரர்கள், அலுவலர்கள், அவர்களது குடும்பத்தவர் எனப் பல தென்னிந்தியர்கள் வாழ்ந்து வந்தார்கள். இந்துக்களான இவர்களது தேவைக்காகக் கட்டப்பட்டனவே பொலன்னறுவை இந்துக் கோயில்கள். இங்கே பத்துச் சிவன் கோயில்களும், ஐந்து விஷ்ணு கோயில்களும், ஒரு காளி கோயிலுமாகப் பதினாறு இந்துக் கோயில்கள் அகழ்வாராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டுள்ளன. இவை அனைத்துமே சோழர் காலத்தில் கட்டப்பட்டவை என்பதற்கில்லை. ஒன்றிரண்டு கோயில்கள் மட்டுமே அவ்வாறு கூறத்தக்கவை. பாண்டியர் காலத்திலும் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. கலிங்க மாகனின் காலத்திலும் இவற்றுட் சில கட்டப்பட்டிருக்கக் கூடும் எனக் கருதப்படுகின்றது.
வரலாற்றுப் பின்னணி[தொகு]
பத்தாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில், இலங்கை மீது படையெடுத்த இராஜராஜ சோழன் அந்நாட்டின் தலைநகரமாக இருந்த அனுராதபுரத்தைக் கைப்பற்றினான். இதன் மூலம் இலங்கையின் வடபகுதி சோழரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அது மும்முடிச் சோழ மண்டலம் என்னும் பெயருடன் சோழப்பேரரசின் ஒரு பகுதியாக ஆனது. போரில் அழிந்துபோன அனுராதபுரத்தைக் கைவிட்டு, அதற்குத் தென்கிழக்கில் இருந்த பொலன்னறுவை தலைநகரம் ஆக்கப்பட்டது. 1017 ஆம் ஆண்டில் இராஜராஜனின் மகனான இராஜேந்திர சோழன் மீண்டும் இலங்கை மீது படையெடுத்து அந்நாடு முழுவதையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தான். தொடர்ந்து சோழரின் ஆட்சி இலங்கையில் 1070 ஆம் ஆண்டுவரை இடம்பெற்றது.
சோழர் இலங்கையில் ஒரு ஆக்கிரமிப்புப் படை என்பதாலும், சிங்களவர்களுக்கும், சோழர்களுக்கும் நீண்டகாலப் பகை இருந்ததாலும், ஆட்சியைப் பாதுகாப்பதற்காகச் சோழர், ஏராளமான தமிழ்நாட்டுப் படைகளையும், அதிகாரிகளையும், அலுவலர்களையும் இலங்கையில் வைத்திருக்கவேண்டி இருந்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை. இவர்கள் பெரும்பாலும் இந்துக்களாகவே இருந்திருப்பார்கள். இப்பகுதிகளில் வாழ்ந்த சிங்களவர்கள் பௌத்தர்கள் என்பதால், இந்துக்களின் வழிபாட்டிடங்கள் இங்கே இருந்திருக்க முடியாது. எனவே சோழர் ஆட்சிக்காலத்தில் பல இந்துக் கோயில்கள் பொலன்னறுவையில் அமைக்கப்பட்டன.
கோயில்களின் விபரங்கள்[தொகு]
முன் குறிப்பிடப்பட்ட பதினாறு கோயில்களுக்கும், பெயர்கள் இருந்திருக்கும் எனினும், இவை அனைத்தும் அறியப்படவில்லை. இலங்கைத் தொல்பொருள் துறையினர் இவற்றை எண்கள் மூலம் அடையாளம் காண்கின்றனர். சிவ தேவாலயங்களுக்கு, முதலாம் சிவ தேவாலயம், இரண்டாம் சிவ தேவாலயம் என்றவாறு பெயர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுள் சோழர் காலத்தில் வானவன் மாதேவி ஈச்வரம் என அழைக்கப்பட்ட இரண்டாம் சிவ தேவாலயமே முழுமையாகப் பேணப்பட்ட நிலையில் உள்ளது. இது தவிர ஐந்தாம் சிவ தேவாலயமும் ஓரளவுக்கு நல்ல நிலையில் உள்ளது. ஏனையவற்றுள் பெரும்பாலானவை அடித்தளம் முதலான குறைந்தளவு தடயங்களையே கொண்டுள்ளன.
காலம்[தொகு]
முழுமையாகப் பேணப்பட்டுள்ள வானவன் மாதேவி ஈஸ்வரமும், குறிப்பிடத்தக்க கட்டிடப்பகுதிகள் எஞ்சியுள்ள வேறு சில கோயில்களும், அவற்றின் கட்டிடக்கலைப் பாணியை ஆதாரமாக வைத்துச் சோழர் காலக் கோயில்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்துடன், வானவன் மாதேவி ஈஸ்வரத்தில் காணப்பட்ட கல்வெட்டின் துணை கொண்டு அது முதலாவது இராஜேந்திர சோழனின் ஆரம்ப காலத்தைச் சேர்ந்தது எனக் கணிக்கப்பட்டுள்ளது. முதலாவது சிவ தேவாலயம் பாண்டியர் கட்டிடக்கலைப் பாணியில் அமைக்கப்பட்டது. இது பன்னிரண்டு அல்லது பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கருதப்படுகின்றது[1]. போதிய சான்றுகள் காணப்படாமையால் ஏனையவற்றின் காலத்தை அச்சொட்டாக அறியக் கூடவில்லை.
கட்டிடக்கலை[தொகு]
இங்கே கட்டப்பட்ட பெரும்பாலான இந்துக் கோயில்கள் அளவிற் சிறியன. இங்கே வாழ்ந்த இந்துக்களிற் பலர் இவ்விடங்களில் நிரந்தரமான ஆர்வம் கொண்டவர்களாக இருந்திருக்க முடியாது. அத்துடன், உள்ளூர் மக்களை மதம் மாற்றும் முயற்சியிலும் சோழர்கள் ஈடுபடவில்லை இதனால், தமிழ் நாட்டில் கட்டப்பட்டது போன்ற பெரிய கோயில்கள் இலங்கையில் சோழர்களால் கட்டப்படவில்லை.
வானவன் மாதேவி ஈஸ்வரத்தின் அமைப்பு சோழர் காலத் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியைச் சேர்ந்தது. இக்காலத்தில் அமைக்கப்பட்ட ஏனைய கோயில்களும், இப்பாணியையே பின்பற்றியிருக்கும் எனலாம்.
குறிப்புகள்[தொகு]
- ↑ Godakumbure C. E., Architecture of Sri Lanka, Department of Cultural Affairs, Sri Lanka, Second Edition, 1976
உசாத்துணைகள்[தொகு]
- இந்திரபாலா கா., இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை, விஜயலட்சுமி புத்தகசாலை, கொழும்பு, 1970.